20 தற்காப்பு கலைகளில் இந்திய திபெத் படைக்கு ஆயுதமற்ற போர் பயிற்சி; சீனாகாரன் சிக்கினால் இனி அதோகதி

பஞ்ச்குலா: சீனா உடனான எல்லையை பாதுகாக்கும் இந்தோ -  திபெத் எல்லைப் படையினருக்கு புதிதாக ஆயுதமின்றி தாக்கும் போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சீனாவுடன் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையில் உள்ள 3,488 கிமீ தூர எல்லையை 98 ஆயிரம்  வீரர்களை கொண்ட இந்திய - திபெத் எல்லைப் படையினர் (ஐடிபிபி) பாதுகாத்து வருகின்றனர். லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இப்படையை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது சீன வீரர்கள் கற்கள், ஆணி அடித்த கம்புகள், இரும்பு கம்பிகளை பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கினர்.

இந்நிலையில், சீனாவின் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தோ - திபெத் எல்லைப் படையினருக்கு ஆயுதமின்றி சண்டை போடுவதற்கான தற்காப்பு கலைகள் கற்பிக்கப்படுகிறது. ஜூடோ, காரத்தே, இஸ்ரேல் ராணுவத்தினர் பயன்படுத்திய கிராவ் மாகா உள்பட 20 தற்காப்பு கலைகளைக் கொண்டு ஆயுதமின்றி புதிய, நவீன போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தோ - திபெத் படையில் புதிதாக சேரும் வீரர்களுக்கு 3 மாத பயிற்சியில் அனைத்து தற்காப்பு கலைகளிலும் உள்ள குத்துதல், உதைத்தல், தூக்கி வீசுதல், அசைய விடாமல் போடும் கிடுக்கிப்பிடி, எதிரியை வீழ்த்துதல் உள்ளிட்ட ஆயுதமற்ற போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

Related Stories: