ஐநா மாநாட்டில் ஜெய்சங்கர் எச்சரிக்கை; தீவிரவாதிகளின் சக்தி வாய்ந்த கருவியாகும் சமூக ஊடகங்கள்: உலகளாவிய நடவடிக்கை தேவை என வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘தீவிரவாதிகளின் சக்திவாய்ந்த கருவியாக சமூக ஊடக தளங்கள் மாறி வருகின்றன. இதை தடுக்க, உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை’ என ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் 2 நாள் சிறப்பு கூட்டம் முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது. முதல் நாள் கூட்டம் மும்பையில் நடந்த நிலையில், 2ம் நாள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இதில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளில் உருவான மெய்நிகர் நெட்வொர்க்குகள், என்கிரிப்டட் செய்தி சேவைகள், பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உலகம் செயல்படும் விதத்தை மாற்றி, பொருளாதார, சமூக நலன்களுடன் மிகவும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்கி உள்ளன. அதே சமயம், அந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கென மறுபக்கம் ஒன்றும் உள்ளது. அது அரசுகள் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கி உள்ளன.

சமீப ஆண்டுகளில் தீவிரவாத அமைப்புகள், தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் இத்தகைய தொழில்நுட்பங்கள் மூலம் தங்களின் திறன்களை மேம்படுத்தி உள்ளனர். சமூக ஊடக தளங்கள் தீவிரவாத குழுக்களின் புதிய சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன. சுதந்திரம், சகிப்புத்தன்மை போன்றவைகளுக்கு எதிராக நாச சக்திகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.

எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவும், போதை பொருட்கள், ஆயுதங்களை கடத்தவும் ஆளில்லா டிரோன்களை பயன்படுத்துகின்றனர். எனவே, புதிய தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

ஐநா தலைவர் வேண்டுகோள்

கூட்டத்தில் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரெஸ் பேசுகையில், ‘‘மக்களை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கும், சமூகத்தில் கருத்து வேறுபாடுகளை தூண்டுவதற்கும் பல்வேறு தீவிரவாத குழுக்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை தடுக்க, உலகளவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,’’ என்றார்.

ரூ40 கோடி நிதி

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைளுக்காக ஐநா அறக்கட்டளைக்கு இந்த ஆண்டு இந்தியா ரூ.40 கோடி நிதி வழங்க இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: