முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் மு.க.ஸ்டாலின் 22.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் எண்.110 ன் கீழ்  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகளின் தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்த வேண்டியும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொலை தொடர்பு இயக்கங்கள் நடத்தவும்  ஏதுவாக நவம்பர் 1ம் தேதியை உள்ளாட்சிகள் தினமாக கொண்டாட ஆவண செய்யப்பட்டுள்ளது.முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க 2022ம் ஆண்டு முதல் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடும் வகையில் கிராமசபை கூட்டங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், சிறந்த ஊழியர்களை அங்கீகரித்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நவம்பர் 1ம் தேதியை உள்ளாட்சிகள் தினமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடு ஆகியன குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் கிராம சபை கூட்ட நிகழ்வுகளை கண்காணித்திடும் வகையில் ‘நம்ம கிராம சபை’ என்கிற கணிணி/தொலைபேசி மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி  கிராம சபை  நிகழ்வுகளை  கண்காணிக்கும்  வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஊரக வாழ் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: