2020-ஐ காட்டிலும் 2021ல் 18% அதிகரிப்பு 21.4 லட்சம் பேர் காசநோயால் பாதிப்பு: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 21.4 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசநோய் அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் கடந்தாண்டில் 1,00,000 மக்கள்தொகை அடிப்படையில் 210 பேருக்கு காசநோய் பாதிப்பு உள்ளது. அதே 2015ம் ஆண்டின் அடிப்படையில் ஒப்பிடும்போது 256 பேருக்கு பாதிப்பு இருந்தது. கிட்டதட்ட 18 சதவிகிதம் அளவிற்கு காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. உலக அளவில் 7 சதவிகிதப் புள்ளிகளுடன் இந்தியா 36வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காலகட்டத்தில் தேசிய காசநோய் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், தற்போது காசநோய் பாதிப்பு குறைந்துள்ளதை சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும், கடந்தாண்டு புள்ளி விபரங்களின்படி 21.4 லட்சத்திற்கும் அதிகமானோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2020ம் ஆண்டை காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘காசநோய் பாதிப்பானது ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தின் மூலம் ரூ.670 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டது. காசநோய் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் மூலம் பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: