தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் ஒன்றிய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. இதை மூடி மறைக்கின்ற வகையில் பாஜ ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் இந்தி மொழியை புகுத்துவதை நோக்கமாக கொண்டு பாஜ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை திணித்தால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். இதில் இந்தியை திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாக கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது. ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து மாவட்ட பாஜ சார்பாக சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சென்னை ஐகோர்ட்டில் செய்த மனு தாக்கலில், கோவை மாநகர் கடையடைப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று தமிழக பாஜ தலைவர் கூறியிருக்கிறார். இதில் பாஜ.வின் அதிகாரப்பூர்வ நிலை என்ன? இதில் கூட பாஜ.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. இதன்மூலம் பாஜ.வின் சந்தர்ப்பவாத அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது.

Related Stories: