கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் சோதனை-வேலூர் நகரில் முன்னெச்சரிக்கை தீவிரம்

வேலூர் : வேலூர் நகரில் சாலைகள், வழிபாட்டு தலங்களின் அருகில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் சோதனை நடத்தினர்.

கோவையில் தீபாவளிக்கு முதல் நாள் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்து தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பாக  தமிழக போலீசாரும், தேசிய புலனாய்வு முகமையும் விசாரணை நடத்தி 6 பேரை  கைது செய்துள்ளதுடன், 75 கிலோ வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் எதிரொலியாக மாநிலம் முழுவதும் உளவுத்துறை போலீசார் மட்டுமின்றி உள்ளூர் போலீசாரும் உஷார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி வேலூர் நகரில் சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள், வழிபாட்டு தலங்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் நேற்று வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர் மெட்டல் டிடெக்டர் உட்பட நவீன சாதனங்களுடன்  சோதனையிட்டனர்.

மேலும் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் உட்பட முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு வந்த பொதுமக்கள் சுற்றுலா பயணிகளின் உடமைகளையும் சோதனையிட்டனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘சாலைகள், வழிபாட்டு தலங்கள் மட்டுமின்றி மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும், சந்தேகத்துக்குரிய இடங்களிலும், பஸ் நிலையம், ரயில்நிலையங்களிலும், மாநில, மாவட்ட எல்லைகளிலும் இத்தகைய சோதனைகள் தொடரும்’ என்றனர்.

Related Stories: