ராஜஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள 369 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை இன்று திறப்பு: 20 கிமீ தூரத்தில் இருந்தும் பார்த்து தரிசிக்கலாம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான 369 அடி சிவன் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் மாவட்டம், நத்வாரா நகரில் 369 அடி உயரத்தில் சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. ‘விஸ்வாஸ் ஸ்வரூபம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை, ‘தட் பதம் சன்ஸ்தான் அமைப்பு’ கட்டி உள்ளது. இதுவே உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை என கூறப்படுகிறது. இதன் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடக்க உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்று இதை  திறந்து வைக்க உள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு இந்த சிலையை அமைக்க முதல்வர் கெலாட் அடிக்கல் நாட்டினார். 16 ஏக்கர் பரப்பளவில் மலை உச்சியில் இந்த சிலை சிவன் தியானம் செய்யும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விளக்குகளில் அமைக்கப்பட்டு இருப்பதால் இரவிலும் சிலை வண்ணமயமாக காட்சி தரும். இந்த சிலையை 20 கிமீ தொலைவில் இருந்தும் பார்க்க முடியும்.இந்த சிலை காரணமாக, சுற்றுலா துறையும் மேம்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து நவம்பர் 6ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

250 கிமீ புயல் காற்றையும் தாங்கும்

* இந்த சிலை 3 ஆயிரம் டன் இரும்பு, 2.5 லட்சம் கன டன் கான்கிரீட், மணல் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

* சிலை இருக்கும் மலை உச்சிக்கு செல்ல 4 லிப்ட், மூன்று படிக்கட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* 250 ஆண்டு ஆயுட்காலம் கொண்ட இந்த சிலை, 250 கிமீ வேகத்தில் வீசும் புயலையும் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சிலையின் வலிமை குறித்த சோதனைகள் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிலையை சுற்றி உணவு அரங்குகள், பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: