வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: ஐநா கவலை

சியோல்: வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து, வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த 6ம் தேதியும் வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்தியது. அப்போது, அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா, ஏவுகணை சோதனைகள், கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலடியாகவே ஏவுகணை சோதனை நடத்தியதாக தெரிவித்தது.

இது அப்போதைய சூழலில், 2 வாரங்களில் வடகொரியா நடத்திய 6வது ஏவுகணை சோதனையாகும். இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் குறுகிய தொலைதூர ஏவுகணை சோதனை நடத்தியதாகவும், கிழக்கு கடலோரத்தில் உள்ள டாங்சோன் பகுதியில் இருந்து அது விண்ணை நோக்கி பாய்ந்ததாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை ஆத்திரமூட்டுவதாக தெரிவித்த தென் கொரியா, அதன் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தாண்டு மட்டும் வடகொரியா 40க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.

ஐநா.வின் அணுஆயுதப் பிரிவு தலைவர் ரபேல் குரோசி, `வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது, வடகொரியா ஆயுத தளவாடங்களை போருக்கு தயார்நிலையில் வைப்பதை காட்டுகிறது. ஐநா இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது,’ என்று தெரிவித்தார்.

Related Stories: