சென்னையில் 2 வாரங்களில் 695 தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை; மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 856 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 695 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் தொல்லைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து இனக்கட்டுப்பாடு செய்யும் பணி மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்களும், ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவர் உள்ளனர்.

நாய்களை பிடிப் பதற்காக 64 வலைகள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம், கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட லாயிட்ஸ் காலனி நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது சுகாதாரத் துறையின் சார்பில் கடந்த 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை இரண்டு வாரங்களில் 856 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 695 தெருநாய்களுக்கு நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தில் கால்நடை மருத்துவக் குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க அவைகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: