நந்தனத்தில் ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன புதிய தலைமையக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி திறந்து வைத்தனர்

சென்னை: நந்தனத்தில் ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கலைஞர் தலைமையிலான அரசால் 2007ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமான பணிகளை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2009ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கோயம்பேடு பணிமனை வளாகத்தில் அமைந்துள்ள இயக்க கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் மெட்ரோ ரயில் இயக்கத்தையும், நிர்வாக பணிகளையும் தற்போது நிர்வகித்து வருகின்றது. எதிர்கால தேவையினை  கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்திற்காகவும், மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டிடத்தை அமைத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தினையொட்டிய முக்கிய சாலையான அண்ணாசாலையில், தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்த 8.96 ஏக்கர் நிலத்தில் ரூ.320 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.  

இந்த தலைமையக கட்டிடம், தனித்துவ வடிவமைப்பை கொண்டு (அடித்தளம் மற்றும் தரைத்தளத்தைத் தவிர்த்து)  12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இந்திய பசுமை கட்டிட மன்றத்தின் பிளாட்டின அளவு கோலின்படி பல்வேறு பசுமை கட்டிட கூறுகளுடன் கட்டப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் தலைமையக கட்டடத்தில், கட்டம்-I மற்றும் கட்டம்-IIன் இயக்கங்களை கண்காணிப்பதற்கான இயக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பேரிடர் காலங்களில் ஏற்கனவே கோயம்பேட்டில் அமைந்துள்ள பிரதான இயக்க கட்டுப்பாட்டு மையத்தில் ஏதேனும் பழுது ஏற்படும் பட்சத்தில், இது  நிழல் மையமாகவும் செயல்படவுள்ளது.

இந்த கட்டிடத்தின் வளைந்த வடிவமைப்பு, தகவல் தொடர்பினை மேம்படுத்துவதாகவும், எளிதில் நடமாடும் வகையிலும், பூகம்ப நேரத்தில் ஏற்படும் பளு மற்றும் காற்றின் பாதிப்பினை குறைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்களுக்கு, வாகனங்கள் நிறுத்துமிடத்திலேயே மின்னேற்றும் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் நேற்று திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.கிரிராஜன், எம்எல்ஏ த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ஹிதேஸ் குமார் மக்வானா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்பு பணி அலுவலர் ஜெய்தீப் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: