ஈரானில் வழிபாட்டு தலத்தில் புகுந்து சரமாரி துப்பாக்கி சூடு; 15 பேர் பலி: 2 பேர் கைது; ஒருவன் தப்பி ஓட்டம்

தெக்ரான்: ஈரானில் வழிபாட்டு தலத்தில் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவன் தப்பி ஓடி விட்டான். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த போராட்டம் 40வது நாளான நேற்றும் நீடித்தது. இந்நிலையில் அந்நாட்டின் 2வது புனித தலமான ஷா செராக் மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் காரில் வந்த மர்ம கும்பல், திடீரென மசூதிக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கி ஏந்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவன் தப்பி ஓடிவிட்டதாகவும், ஈரான் நீதித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று, ஈரானிய செய்தி இணையதளம் கூறியுள்ளது.

திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடும் பதிலடியை திரும்ப பெறுவார்கள் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: