தமிழக மீனவர்கள் 7 பேர் கைது: இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி சேர்ந்த மீனவர்கள்  7 பேர்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை கடந்த 20ம் தேதி இலங்கைப் படையினர் கைது செய்தனர்.  அவர்களை இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக  தமிழக மீனவர்களை கைது செய்து  இலங்கைப் படை  மீண்டும் தனது அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் 10வது கைது நடவடிக்கை இதுவாகும். இது வரை மொத்தம் 84 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக  ஒன்றிய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை இலங்கை அரசுக்கு கொடுத்துள்ளது. தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும்.  ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: