பொள்ளாச்சி அடுத்த வடசித்தூரில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் ‘மயிலந்தீபாவளி’ கொண்டாட்டம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி அடுத்த வடசித்தூரில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலிறுத்தும் மயிலந்தீபாவளி 3 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர்.

இங்கு கொரோனாவால் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலந்தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை ‘மயிலந்தீபாவளி’ என்று அழைக்கிறார்கள்.

இந்த கிராமங்களில் இந்துக்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் குடும்பத்தினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் உறவினர்கள்போல் பழகி வருவதால் ஆண்டுதோறும் மயிலந்தீபாவளியில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர். நேற்று சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமக்களும் கலந்து கொண்டதால் வடசித்தூர் விழா கோலம் பூண்டது.வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ராட்டினங்கள் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகள், அமைக்கப்பட்டு ஊரே களை கட்டியது.

இது குறித்து தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:மயிலந்தீபாவளி நிகழ்ச்சியில், வயதுவேறுபாடின்றியும், மதம் மற்றும் சாதிபேதமின்றி ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்து, முஸ்லிம் மக்களின் ஒற்றுமை, இந்த மயிலந்தீபாவளியிலும்  காணமுடிகிறது.

 தீபாவளிக்கு அடுத்த நாள் நடைபெறும் மயிலந்தீபாவளி, இந்தியாவிலும் மட்டுமின்றி, வெளி நாடுகளிலும்  எங்கும் நடப்பதாக தெரியவில்லை. இத்தருணத்தில், வடசித்தூரில், தீபாவளிக்கு அடுத்தநாள் மயிலந்தீபாவளியை வெளிவுலகுக்கு இன்னும் தெரியப்படுத்தி, மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் தொடந்து ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: