திருவொற்றியூரில் பட்டாசு தீப்பொறி விழுந்து குடிசை எரிந்ததில் மூதாட்டி கருகி சாவு: வீட்டின் உரிமையாளர் காயம்

சென்னை: திருவொற்றியூரில் பட்டாசு தீப்பொறி விழுந்து குடிசை வீடு எரிந்ததில் உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது வீட்டின் மாடியில் மல்லிகா (65) என்பவர் குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இவரது கணவர், மகன் ஆகியோர் இறந்து விட்டதால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பட்டாசு தீப்பொறி பட்டு குடிசை எரிந்தது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் வெளியே வர முடியாமல் மல்லிகா அலறி துடித்தார். சத்தம் கேட்டு கீழே இருந்த வீட்டின் உரிமையாளர் சேகர் உடனடியாக மேலே வந்து மூதாட்டி மல்லிகாவை காப்பாற்றினார்.

அப்போது, இருவருக்கும் உடம்பில் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மல்லிகாவிற்கு அதிகமான தீக்காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி மல்லிகா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தகவலறிந்து, கே.பி.சங்கர் எம்எல்ஏ, திருவொற்றியூர்  மேற்கு பகுதி திமுக செயலாளர் அருள்தாஸ், கவுன்சிலர் திரவியம் ஆகியோர் தீ  விபத்தில் பலியான மல்லிகா உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி  நிவாரண உதவிகளை வழங்கினர்.

Related Stories: