சின்னாளபட்டி அருகே தொடர்மழையால் அழுகி வரும் திராட்சை பழங்கள்: விவசாயிகள் கவலை

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அருகே, தொடர்மழை காரணமாக கொடியிலேயே திராட்சை பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, அமலிநகர், ஜே.ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுன்டன்பட்டி, செட்டியபட்டி, மெட்டூர், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 40 வருடங்களாக திராட்சை பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியின் மண் வளம் மற்றும் சிறுமலையில் இருந்து வரும் ஊற்று நீரால் இங்கு விளையும் திராட்சைகள் நல்ல ருசி மற்றும் கண்கவரும் நிறத்துடன் வளர்கிறது. இப்பகுதியில் விளையும் திராட்சைகளுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் தனி மவுசு உண்டு.

தமிழகத்தில் கம்பம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அடுத்தாற்போல் சின்னாளபட்டி அருகே உள்ள ஜாதிக்கவுண்டன்பட்டி, காமலாபுரம், கொடைரோடு பகுதியில் தான் அதிகளவில் திராட்சைகள் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டுக்கொடி திராட்சை, கருந்திராட்சை, பன்னீர் திராட்சை என்ற பெயருடன் இங்கு விளைவிக்கப்படும் திராட்சைப்பழங்கள் அறுவடை செய்து 10 நாட்கள் வரை உதிராமல் இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தற்போது தொடர்மழை பெய்து வருவதால் திராட்சை பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து அழுகிய பழங்களை திராட்சை கொடியிலிருந்து வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: