தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள் செய்ய இடம் ஆய்வு கன்னியாகுமரியில் நவ.17 முதல் சீசன் தொடக்கம்-முன்னேற்பாடுகளில் பேரூராட்சி நிர்வாகம் தீவிரம்

நாகர்கோவில் : கன்னியாகுமரியில் சீசனுக்கான முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி நிர்வாகம் தொடங்க உள்ளது. தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில்  செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

முக்கடல் சங்கமிக்கும் இங்கு, நடுக்கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து நடக்கிறது. கடந்த ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்களையொட்டி ஒரு வாரத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றுள்ளனர்.

கன்னியாகுமரிக்கு நாள்தோறும் அதிக சுற்றுலா பயணிகள் வந்தாலும் கூட நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் (பொங்கல் வரையிலான கால கட்டம்) சீசன் காலமாக பார்க்கப்படுகிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்கள் சபரிமலைக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கடலும்  சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கும் வந்து கடலில் நீராடி, பகவதியம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்த கால கட்டம் தான் கன்னியாகுமரியில் சீசன் காலமாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவின் கோர பிடி காரணமாக கன்னியாகுமரி அடியோடு முடங்கியது. 2021 ஜூலைக்கு பின்னரே படிப்படியாக மீண்டு, தற்போது ஓரளவு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி  உள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சீசன் கால கட்டத்தை கன்னியாகுமரி வியாபாரிகள் பெருமளவில் எதிர்பார்த்துள்ளனர். இவ்வருட மண்டல மற்றும் மகர விளக்கு கால பூஜைகளுக்காக அடுத்த மாதம் (நவம்பர்) 16ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.

நவம்பர் 17ம் தேதி கார்த்திகை 1 ஆகும். டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நிறைவடைகிறது. பின்னர் ஜனவரியில் மகர விளக்கு பூஜை நடைபெறும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கால கட்டம் என்பதால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலைக்கு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் தான் வந்திருந்தனர்.

இந்த வருடம்  மிக அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கியது. இந்த நிலையில் கன்னியாகுமரியிலும் நவம்பர் 17ம் தேதி முதல் (கார்த்திகை 1) சீசன் தொடங்குகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் குமரி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு ஏற்பாடுகள் செய்ய உள்ளன. பக்தர்களுக்கு நெருக்கடி இல்லாத வகையில்தற்காலிக கடைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கடைகளுக்கான ஏலமும் விரைவில் நடைபெற உள்ளது. பார்க்கிங் வசதிகள், தற்காலிக கழிவறைகள் எங்கெங்கு அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கன்னியாகுமரியில் தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. சீசன் காலத்தில் அதிகம் பேர் வருவார்கள் என்பதால் விரைவில் பராமரிப்பு பணிகளை முடிக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. 2 வருடங்களுக்கு பின் இந்த வருடம் கன்னியாகுமரி சீசன் காலம் வியாபாரிகள் மத்தியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: