ஒரு கால பூஜை, கோயில் பெயரில் மின்சாரம் பெற 15 ஆயிரம் கோயிலுக்கு தலா ஒரு அர்ச்சகர் நியமனம்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நிதி வசதியற்ற கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறாத நிலையில் அக்கோயில்களுக்கு நிதி வசதிமிக்க கோயில்களின் உபரி நிதியிலிருந்து ரூ. 5 கோடியினை பெற்று வைப்பு நிதியாக முதலீடு செய்து ஒரு கால பூஜை திட்டத்தினை செயல்படுத்த அரசால் ஒரு கால பூஜை நிலையான வைப்பு நிதி உதவி திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்பின்னர் புதிதாக 20 கோயில்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் முதலீடு செய்யப்பட்டு 12,979 கோயில்களில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 2022-2023ம் ஆண்டின் சட்டப்பேரவை அறிவிப்பின்படி இத்திட்டம் மேலும் 2000 கோயில்களுக்கு விரிவுபடுத்திட ரூ. 40.00 கோடி அரசுமானியம் முதல்வரால் 14.10.2022 அன்று வழங்கப்பட்டு கோயில் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வீதம் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக 21 கோயில்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் வைப்பு நிதி ஏற்படுத்திட தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜைகள் நடைபெறும் திருக்கோயில்களின் எண்ணிக்கை 15000 ஆகும். இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஒரு வேளை பூஜையாவது நடைபெறுதல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அரசால் ரூ. 170 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை மேம்படைய செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து 19.10.2022 அன்று சீராய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.15000 கோயில்களுக்கும் ஒரு கோயிலுக்கு ஒரு அர்ச்சகர் வீதம் பதிவு செய்திடல் வேண்டும்.

*கோயில்களின் பெயரில் மின் இணைப்பு இல்லாமல் தனிநபர் பெயரில் இருப்பின் உடனடியாக கோயில் பெயரில் மின் இணைப்பு மாற்றுதல் வேண்டும்.

*மின் இணைப்பு பெற இயலாத மற்றும் மலைப்பகுதி, கண்மாய் பகுதிகளில் கோயில்கள் அமையப்பெற்று இருப்பின் இத்திருக்கோயில்களுக்கு சூரிய ஒளி மின்விளக்கு அமைத்திட நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். கோயில்களில்பூஜை செலவினத்திற்கான போதிய நிதி வசதி கிடைக்கபெற்றுள்ள கோயில்களை இத்திட்டத்தில் இருந்து நீக்கி அவற்றிற்கு மாற்றாக நிதி உதவி தேவைப்படும் கோயில்களை பரிந்துரைத்திடல் வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: