கண்டாச்சிபுரம் அருகே கி.பி.15ம் நூற்றாண்டை சேர்ந்த வேடியப்பன் சிற்பம் கண்டுபிடிப்பு

கண்டாச்சிபுரம்: திருவண்ணாமலை மாவட்டத்தை ஒட்டி உள்ள விழுப்புரம் மாவட்ட எல்லையான மழவந்தாங்கல் கிராம எல்லையில் விழுப்புரம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் மழவந்தாங்கல் ஏரிக்கரை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் 3 மலைகளையொட்டியுள்ள மலை அடி வாரத்தின் அருகில் தனித்த பெரிய பாறையில் நடுவில் வேடியப்பன் எனும் சாமி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இதனை மழவந்தாங்கல், மலையரசன்குப்பம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு, வேட்டவலம் உள்ளிட்ட அருகில் உள்ள கிராம மக்கள் சிலர் காலம் காலமாக அந்த இடத்தில் மண் குதிரை பொம்மைகள் வைத்து வருடத்தில் அவ்வப்போது வழிப்பட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இடத்தில் விழுப்புரத்தை சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார்.

அப்போது கி.பி. 15ம் நூற்றாண்டு வேடியப்பன் சிற்பம் தற்போது வழிபாட்டில் இருந்து வருவது கண்டறியப்பட்டது. இதுபற்றி செங்குட்டுவன் கூறியதாவது: மழவந்தாங்கல் வனப்பகுதியில் தனித்த பாறை ஒன்றில் வேடியப்பன் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 அடி உயரம் 4 அடி அகலம் முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் மிகவும் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் காட்சி தருகிறார். அவரது 2 கரங்களில் வில் மற்றும் அம்பு இடம் பெற்றுள்ளன. சிற்பத்தின் பின்னணியில் பெரிய விலங்கு ஒன்று காட்டப்பட்டுள்ளது. அது வேடியப்பனின் வாகனமான குதிரை என்று அப்பகுதி உள்ளூர் வாசிகளால் கூறப்படுகிறது.

மேலும் வேடியப்பன் கால்களுக்கு கீழே 2 சிறிய நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்வது போல் அச்சிற்பம் காட்டப்பட்டுள்ளன. இந்த சிற்பம் கி.பி.15ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூரை சேர்ந்த வெங்கடேசன் உறுதிபடுத்தி இருக்கிறார். ஆய்வின் போது வேடியப்பன் கோயில் நிர்வாகி ஆறுமுகம், கவிஞர் அதியமான் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: