திருச்சியில் பரபரப்பு: விமான நிலைய சுற்றுச்சுவரை உடைத்து புகுந்த லாரி

திருச்சி: தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து நேற்று இரவு ஒரு லாரி தக்காளி லோடு ஏற்றி கொண்டு புதுக்கோட்ைட மாவட்டம் அறந்தாங்கிக்கு வந்தது.  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை சேர்ந்த செந்தில்குமார்(49) லாரியை ஓட்டினார். இன்று அதிகாலை திருச்சி விமான நிலையம் அருகில் வந்தபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்ைட இழந்து விமான நிலைய தடுப்பு சுவரில் மோதியது. இதில் சுவர் உடைந்து, பாதியளவுக்கு லாரி உள்ளே புகுந்து நின்றது.

தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர் மீட்பு வாகனம் மூலம் லாரி மீட்கப்பட்டு வெளியே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உள்பட யாருக்கும்  காயம் ஏற்படவில்லை. லாரியின் முன் பகுதி லேசாக சேதம் அடைந்தது. உடைந்த தடுப்பு சுவரில் இரும்பு தகடு கொண்டு அடைக்கப்பட்டது.

போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டிரைவர் செந்தில்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் எதிரில் இன்னொரு லாரி வந்ததால் பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் லாரி மோதியதாக அவர் கூறினார்.

அவர் கூறியது உண்மையா அல்லது அவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி தடுப்பு சுவரில் மோதினாரா என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் அதிகாலை நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: