தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு; ஏர்போர்ட்டில் அலை மோதும் பயணிகள் கூட்டம்: டிக்கெட் கட்டணமும் பல மடங்கு உயர்வு

மீனம்பாக்கம்: தீபாவளியை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பலர், தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட பஸ், ரயில் மற்றும் விமானங்களில் செல்கின்றனர்.

இன்று, நாளை விடுமுறை என்பதால் நேற்று பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பஸ் மற்றும் ரயில்களிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. அதே நேரத்தில் விமான நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை பயணிகள் பயணம் செய்வார்கள்.

தற்போது, 50 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதனால் விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து வடமாநிலத்தவர்களும், சொந்த ஊர்களுக்கு செல்வதால், கட்டணங்கள் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. சென்னை- டெல்லிக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.12,000 முதல் ரூ18,000 வரை அதிகரித்துள்ளது. சென்னை-கொல்கத்தாவுக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,500. தற்போது ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை.

சென்னை-புவனேஸ்வருக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை. சென்னை- கொச்சிக்கு வழக்கமான கட்டணம் ரூ. 3,500. தற்போது ரூ.9,000. சென்னை-திருவனந்தபுரத்துக்கு வழக்கமான  கட்டணம் ரூ.5,000. தற்போது ரூ.12,000 முதல் 21,000 வரை. அதேபோல சென்னை- மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,200. தற்போது ரூ.12,000. சென்னை-திருச்சிக்கு வழக்கமாக ரூ.3,500. தற்போது ரூ.11,500. சென்னை-தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.4,500. தற்போது ரூ.9,500 முதல் ரூ.11,500 வரை.

சென்னை-கோவைக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,500. தற்போது ரூ.11,500. கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் ஆர்வத்தில் கட்டணத்தை பற்றி கவலைப்படாமல் விமானங்களில் பயணிக்கின்றனர்.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முக்கிய விழாக்களின்போது பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும். இதையறிந்து முன்பாக பலர் டிக்கெட் முன்பதிவு செய்து விடுவார்கள்.

அதுபோன்றுதான் தற்போதும், குறைந்த கட்டண டிக்கெட்கள் அனைத்தும் காலியாகி விட்டது. அதிக கட்டணம் டிக்கெட்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் வேறு வழியின்றி பயணிகளும் டிக்கெட் விலை அதிகம் என்றாலும் அதை பொருட்படுத்தாமல் பயணிக்கின்றனர். அதிக கட்டணம் கொடுப்பதை தவிர்க்க முன்னதாகவே முன்பதிவு செய்திருந்தால் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்’ என்றனர்.

Related Stories: