வடகிழக்கு பருவ மழை: குரங்கணி மலைச்சாலையில் முன்னெச்சரிக்கை பணிகள்; கோட்ட பொறியாளர் ஆய்வு

போடி: வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் போடி அருகே குரங்கணி மலைச்சாலையில் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தேனி மாவட்டம் அதிக அளவில் மலைச்சாலைகளை கொண்டதாக இருக்கிறது. மேற்குத்மலை தொடர்ச்சியில் உள்ள போடி மெட்டு மலை அடிவாரம் முந்தலில் இருந்து சரியாக 10 கிமீ தூரத்தில் குரங்கணி, கொட்டகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள மலைச்சாலை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை அதிகாரிகள் முதற்கட்டமாக ஆய்வு செய்தனர்.  இதன்படி முந்தல் மலை அடிவாரத்தில் இருந்து மலைச்சாலையின் இருபுறமும் மழை நீர் வடிந்து செல்லும் வடிகால்களை சுத்தம் செய்தனர். அதேபோல் வடிகால்களில் மழைநீர் தேங்காத வகையில் அவற்றின் அருகே உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டது.

போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படாதவாறு வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் சாலையில் ஆங்காங்கே இருந்த சிறு பள்ளங்களில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டு தார் உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது. பலத்த மழை காரணமாக மலையிலிருந்து காட்டாற்று வெள்ளம் சாலையில் வரும்போது மண் மற்றும் சரளைக்கற்கள் வரும். அவை சாலைகளில் ஆங்கங்கே குவிந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

இதன்படி ஏற்கனவே குவிந்திருந்த மண் மற்றும் கற்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டன. அத்துடன் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் தேங்கி நிற்காதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகளை மாநில நெடுஞ்சாலை துறைக்கான தேனி கோட்ட பொறியாளர் ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போடி பிரிவின் பொறியாளர்கள் தங்கராஜ் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: