விஸ்வரூபம் எடுக்கிறது சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்துக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராகுமாறு தேனி மாவட்ட வனத்துறை அதிரடி

தேனி: தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை மர்மமாக இறந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் 2 வாரத்திற்குள் ஆஜராகும்படி வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை பகுதியில் தேனி தொகுதி எம்பியும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான பண்ணைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் கடந்த மாதம் ஒரு ஆண் சிறுத்தை சிக்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன், தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோர் வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தனியார் தோட்டங்களில் வன விலங்குகள்  இறந்தால், தோட்ட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதே வழக்கம். ஆனால், தேனி மாவட்ட வனத்துறையினர் எம்.பி ரவீந்திரநாத்துக்கு சாதகமாக செயல்படுவதாக கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் வக்கீல் சத்யா சரவணன் தலைமையில் கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், தேனி மாவட்ட வன அலுவலரிடம் சிறுத்தை மர்மச்சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

இதையடுத்து எம்.பி ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு நாடாளுமன்ற சபாநாயகருக்கு, வனத்துறையினர் கடிதம் அனுப்பினர். இதற்கு பதிலாக ‘விசாரணைக்கு அனுமதி தேவையில்லை. குற்றம் உறுதியானால், கைது செய்ய மட்டுமே அனுமதி பெற வேண்டும்’ என சபாநாயகர் அலுவலகம் பதில் அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து தேனி மாவட்ட வனத்துறை, எம்.பி ரவீந்திரநாத் மற்றும் அருகில் உள்ள தோட்டங்களின் உரிமையாளர்களான காளீஸ்வரன் மற்றும் தியாகராஜன் ஆகிய 3 பேருக்கும் 2 வாரத்திற்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. சிறுத்தை மர்மச்சாவு விவகாரத்தில் எம்.பி ரவீந்திரநாத்துக்கு வனத்துறை சம்மன் அனுப்பியிருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: