தேர்தலில் போட்டியிட இம்ரான்கானுக்கு தடை: பாக். தேர்தல் ஆணையம் அதிரடி

இஸ்லாமாபாத்: பரிசு பொருட்களை விற்றது தொடர்பான குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி  வகித்த போது, வெளிநாட்டு பிரமுகர்கள், தலைவர்கள் பரிசாக வழங்கிய விலை உயர்ந்த பொருட்களை கருவூலத்துக்கு அனுப்பவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பதவி விலகிய போது அந்த  பரிசுப் பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டார். இவற்றை சர்வதேச சந்தையில் நல்ல விலைக்கு விற்றார். அது பற்றிய விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கலில் குறிப்பிடவில்லை. எனவே, அவரை தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு  அரசு  கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜரான இம்ரான் கான், ‘கருவூலத்தில் ரூ.2.1 கோடி பணம் செலுத்திய பின்னர் பொருட்களை எடுத்து சென்றேன். இதன் மூலம், ரூ.5.8 கோடி கிடைத்தது. இதில், விலை  உயர்ந்த 4 ரோலக்ஸ் வாட்ச்சுகள், பேனாக்கள், தங்க மோதிரம் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள்அடங்கும்,’ என தெரிவித்தார். இதை விசாரித்த, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பரிசு பொருட்களை விற்றதில் இருந்து கிடைத்த வருவாயை மறைத்த குற்றத்திற்காக இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: