ரயிலின் கடைசி பெட்டியில் பயங்கர தீ: ஒடிசாவில் 150 பயணிகள் உயிர் தப்பினர்

பத்ரக்: ஒடிசாவில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். ஒடிசா மாநிலம் பத்ரக் - காரக்பூர் இடையிலான பறக்கும் ரயிலானது பஹானாகா ரயில் நிலையத்தை அடைந்தபோது, அந்த ரயிலின் கடைசி ெபட்டியில் திடீரென தீப்பிடித்தது. கடைசி பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக அந்த ரயிலை நிறுத்த ஓட்டுனருக்கு உத்தரவிட்டனர்.

அதையடுத்து அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தி, அந்த ரயில் நிறுத்தப்பட்டது. கடைசி பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவிக் கொண்டிருந்த நிலையில், ரயிலுக்குள் இருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியே குதித்து ஓட்டம் பிடித்தனர். பலரை ரயில்வே அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட பயணிகள், இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடைசி பெட்டியில் ஏற்பட்ட தீ, இரண்டாவது பெட்டி வரை பரவியது. உரிய நேரத்தில் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயை முழுவதுமாக அணைக்கும் வரை, பஹ்னாகா ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் புறநகரில் நிறுத்தப்பட்டன. தற்போது விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: