மதுரை எய்ம்ஸ் அமைவது மேலும் தாமதமாகும்?.. கட்டுமான பணி தொடங்கும் தேதியை கூற முடியாது: ஒன்றிய அரசு கைவிரிப்பு

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என மத்திய அரசு தெரிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் தொடங்காமல் இருப்பது குறித்து தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இருப்பினும் அது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலையும் ஒன்றிய அரசு தெரிவிக்காத நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் நிலவுகிறது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர். 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கட்டுமான பணிகள் முடியும் என்றும் திட்டத்தின் மொத்த மதிப்பீடான 1977.8 கோடி ரூபாயில் 82% சதவீத தொகையை ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனம் வழங்கும் என்றும் மீதி தொகையை மத்திய அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுசுவர் கட்டுமான பணிகள் உள்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92% முடிவடைந்துள்ளதாகவும், அதற்காக 12.35 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்ற விவரம் இல்லை என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் பதில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Related Stories: