நெருங்குது தீபாவளி பண்டிகை; சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறு: பட்டாசு வாங்க குவிந்த வெளியூர் மக்கள்

சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து பட்டாசு வாங்குவதற்காக பொதுமக்கள் வாகனங்களில் சிவகாசிக்கு படையெடுப்பதால் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

சிவகாசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்ய படும் பட்டாசுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உண்டு. சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள் உள்ளன.

இதில் பெரும்பாலான பட்டாசு உற்பத்தி ஆலைகள் சார்பில் நேரடி விற்பனை கடைகளும் உள்ளன. இங்கு முப்பது சதவிகிதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு, புதிய மற்றும் பல வகையான பட்டாசுகளை நேரடியாக தேர்வு செய்யவும் தமிழகம் முழுவதிலும் இருந்து குடும்பத்துடன் வாடிக்கையாளர்கள் சிவகாசிக்கு வருகின்றனர். பட்டாசுகளை பேருந்து மற்றும் ரயிலில் எடுத்துச் செல்ல அரசு தடை விதித்துள்ளதால் சிவகாசிக்கு பட்டாசு வாங்க வரும் பொதுமக்கள் தனித்தனி வாகனங்களில் வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஈரோடு, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் அதிக அளவு வருகின்றன. இதனால் சிவகாசியில் முக்கிய சாலைகளான விருதுநகர் சாலை, சாத்தூர் சாலை வெம்பக்கோட்டை சாலை, காரனேஷன் சந்திப்பு, பஜார், சிவன் கோயில் ரதவீதிகள், தட்டு மேட்டுத் தெரு, காந்தி சாலை, விஸ்வநத்தம் சாலை, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த ஆண்டு பட்டாசு விலை அதிகாிப்பால் துவக்கத்தில் மந்த நிலை இருந்து வந்தது.

ஆயுத பூஜை முடிந்தவுடன் விற்பனை சூடுபிடிக்க துவங்கியது. சிவகாசி பகுதிக்கு தினமும் ஆயிரகனக்கான வாகனங்களில் ெவளியூரில் இருந்து மக்கள் வருகின்றனர். இதனால் சிவகாசி நகர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மேலும் பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு உற்பத்தி குறைவு காரணமாக பட்டாசுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சிவகாசியை சுற்றிலும் உள்ள பட்டாசு கடைகளை தேடி வெளியூர் மக்கள் வாகனங்களில் வருகின்றனர். இதனால் சிவகாசி நகரில் கடும் போக்குவரத்து நொில் ஏற்படுகிறது. இதனால் சிவகாசியில் போக்குவரத்தை சரி செய்ய கூடுதல் போலீசார் நியமிக்க பட்டுள்ளனர்.

இது குறித்து சிவகாசி டிஎஸ்பி பாபு பிரசாத் கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிவகாசிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக மக்கள் வருகின்றனர். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் 175 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சாதாரண நாட்களில் மாலை நேரத்திலும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நாள் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்’’என்றார்.

Related Stories: