சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியில் நீர் குறைந்த பிறகு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ம.சிந்தனை செல்வன் (விசிக) வீராணம் ஏரியைத் தூர்வாரி அதன் கொள்ளவை உயர்த்த அரசு முன்வருமா என்று கேட்டார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: வீராணம் ஏரி 2018ல் தூர்வாரப்பட்டது. அரசு விதிகளின்படி மூன்று ஆண்டுக்கு ஒரு முறைதான் தூர் வாரப்படும். தற்போது கொள்ளளவு நிறைய தண்ணீர் இருக்கின்ற காரணத்தால் தண்ணீர் குறைகிறபோது, தண்ணீர் வடிந்த பிறகு தூர்வாரும் பணி  எடுத்துக்கொள்ளப்படும். இப்போது 2021ம் ஆண்டு தமிழ்நாடு நீர்வள பாசன விவசாய நவீனமயம் மற்றும் நீர் நிலைகள் மீட்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.73.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 9 ஒழுங்கிகள் கட்டப்பட்டு பிரதான கரை பலப்படுத்துகின்ற பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

30.65 கிலோ மீட்டர் நீளம் ஈர்ப்புப்பாதை அமைக்கும் பணியும், வாய்க்கால் தூர் வாரும் பணியும் முடியும் தருவாயில் உள்ளது.  தற்போது வீராணம் ஏரியில் முழு கொள்ளளவிற்கு நீர் சேமிக்கப்பட்டு, விவசாய பாசனத்திற்கும், சென்னை மாநகரத்திற்கு குடிநீர் தேவைக்கும் வழங்கப்படுகிறது. பருவ காலம் முடிந்த பிறகு, வீராணம் ஏரியில் தூர்ந்த பகுதிகளை அளவீடு செய்து விரிவான ஆய்வு மேற்கொண்டு தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படும்.  நாங்கள் ஆட்சியில் இருக்கிறபோது தூர் வாரினோம். அதற்குப் பிறகு, 10 வருடங்களில் என்ன நடந்தது என்று தெரியாது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

Related Stories: