கயத்தாறில் பயங்கரம் வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகி சரமாரி குத்திக்கொலை: மாநில நிர்வாகி உள்பட 6 பேர் கைது

கயத்தாறு: கயத்தாறில் வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் ரேவதி. இவரது மகன் சுரேஷ் (20). திண்டுக்கல்லில் கேட்டரிங் படித்து வந்த சுரேஷ், கொரோனா ஊரடங்கையொட்டி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஊருக்கு திரும்பினார். இங்கு சமையல் மற்றும் பெயின்டிங் வேலை பார்த்து வந்தவர், தூத்துக்குடி மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழக பொருளாளராக இருந்தார். அதில் மாநில அமைப்பு செயலாளராக உள்ள பாளை. சாந்தி நகரைச் சேர்ந்த பரமசிவன் என்ற பந்தல்ராஜ் (34) தலைமையில் ஒரு குழுவும், தென்மாவட்ட மகளிரணி தலைவி அன்னலட்சுமி தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு வருகின்றனர். பந்தல்ராஜ் ஆதரவாளர்களாக கயத்தாறைச் சேர்ந்த வெயில்முத்து, அஜித் கண்ணன் ஆகியோர் உள்ளனர். சுரேஷ், அன்னலட்சுமி ஆதரவாளராக இருந்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கயத்தாறு பகுதியில் வஉசி பேரவை என்ற அமைப்பை உருவாக்கி பன்னீர்குளத்தை சேர்ந்த சங்கர் தலைவராகவும், சுரேஷ் பொருளாளராகவும்  உள்ளனர். இதனை பந்தல்ராஜ் கண்டித்து, என்னை மீறி எப்படி பேரவை நடத்துவாய் என்று எச்சரித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இருவரும் எதிர் எதிர் கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேவதி, மகள் பிரியாவுடன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சுரேஷ், படுக்கையறையில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பந்தல்ராஜ் மற்றும் சிலர் வீட்டுக்குள் நுழைந்து சுரேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் கத்தியை எடுத்து சுரேசை சரமாரியாக குத்தியுள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த ரேவதிக்கும் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கும்பல் தப்பியது. தகவலறிந்த கயத்தாறு போலீசார் விரைந்து வந்து சுரேஷ், ரேவதியை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பரமசிவன் என்ற பந்தல்ராஜ் உட்பட 6 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து காரும், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். ஒரே சமுதாய அமைப்பில் இரு கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இளம்நிர்வாகி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: