தீவிரமாக விசாரிப்பதற்கே சிபிசிஐடிக்கு மாற்றம் கொடநாடு வழக்கில் அதிமுக உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு வெளிவரும்: சேலத்தில் பாலகிருஷ்ணன் பேட்டி

சேலம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: மதஅடிப்படையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியுள்ளார். இதன் மூலம் மத மோதலை ஏற்படுத்த முயற்சிகள் செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். நவம்பர் 6ம் தேதி 60 இடத்தில் ஆர்எஸ்.எஸ் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு அனுமதி வழங்க நீதிமன்றத்திற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்கக்கூடாது.   அனுமதி வழங்கினால் கூட்டணி கட்சிகளுடன் எதிர்த்து போராடுவோம். பாஜ தலைவர் அண்ணாமலை,  கேரள, தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். பத்திரிகையாளர்களை அவதூறாக பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். உண்மை வெளியே வரக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

அதிமுக 2 பிரிவாக இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் ஒரே பாதுகாப்பு பாஜதான்.  கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் போதுமான ஆதாரம் உள்ளது.

இவ்வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பக்கமும் விசாரணை நெருக்கமாக வரும். இதில் அதிமுகவின் உயர்மட்ட தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உண்மை என தெரியவரத்தான் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: