சைவ, வைணவ கோயில்களில் ஓதுவார், தேவாரம் பாடும் பணியாளர்களை வரும் 31ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சைவ, வைணவ கோயில்களில் ஓதுவார்,  தேவாரம், அத்தியாபாகம் பணியிடங்களை வரும் 31க்குள் நிரப்ப வேண்டும் என ஆணையர்  குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கோயில்களில் ஆராதனை நடைபெறும் போது ஆகம விதி மற்றும் கோயில் பழக்கவழக்கங்களின்படி தேவாரம், திருவாசகம், திருமுறை, திவ்வியப்பிரபந்தம், பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. தமிழில் இறைவனை இசையோடு பாடி வழிபாடு செய்யும் இப்பணியானது சைவ கோயில்களில் ஓதுவார், தேவாரம் பணியிடத்தில் பணிபுரிபவர்களாலும், வைணவ கோயில்களில் அத்யாபாகம் போன்ற பணியிடத்தில் பணிபுரிபவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே கோயில்களில் தமிழில் வழிபாடு செய்வதை மேலும் மெருகேற்றும் வகையில் ஏற்கனவே பணியில் உள்ள ஓதுவார், தேவாரம், அத்யாபாகம் போன்ற பணியாளர்களுடன் தற்போது கூடுதலாக பணியாளர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய வரும் 31ம் தேதிக்குள்  நடவடிக்கை எடுத்திட முதுநிலை கோயில் செயல் அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி, ஆணையர் அனுமதி பெற்று இரண்டு பணியாளர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.  தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளர்கள் அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ள அனைத்து தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும். ஏற்கனவே கோயில்களில் இப்பணியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களையும் நியமனம் செய்துக்கொள்ளலாம். ஆனால் அப்பணியாளர்கள்  அனைத்து தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும், நியமனம் செய்யப்படும் தற்காலிகப் பணியாளர்கள் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தரும் அனைத்து நேரங்களிலும் கோயில் பழக்கவழக்கம் மற்றும் நடைமுறைகளின்படி திருமுறைகள், திவ்வியப்பிரபந்தங்கள் போன்ற பாசுரங்களை தொடர்ச்சியாக பாட வேண்டும். எனவே பக்தர்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு கால அட்டவணையினை ஏற்படுத்தி சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.  தற்காலிகப் பணியாளர்களால் பாசுரங்கள், கீர்த்தனைகள், திருமுறைகள் போன்றவை பாடப்படும் போது கோயிலில் உள்ள அனைத்து பிரகாரங்களில் மற்றும் நுழைவு வாயில்களில் இப்பாடல்கள் ஒலிக்கும் வகையில் உரிய எண்ணிக்கையில் ஒலிபெருக்கிகள் நிறுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் அந்தந்த கோயில் பழக்கவழக்கம் மற்றும் நடைமுறைகளின்படி மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: