ரூ.7.5 லட்சம் கடனுக்காக வங்கி ஊழியர் கடத்தல்: நெல்லையில் பரபரப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளை. அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை மேலத்தெருவை சேர்ந்தவர் விஜயபாண்டி (42). இவர், தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷோபா. இவரும், தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (39). இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32), இன்ஜினியரிங் முடித்துவிட்டு செல்லத்துரையுடன் சேர்ந்து தொழில் செய்து வருகிறார். இவர்களிடம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சக்தி என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் விஜயபாண்டிக்கு செல்லத்துரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விஜயபாண்டி நாங்குநேரியைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலுக்காக ரூ 7.5 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அதனை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி செல்லத்துரை பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு விஜயபாண்டியிடம் கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பாளை. முருகன்குறிச்சியில் நின்று கொண்டிருந்த விஜயபாண்டியை செல்லத்துரை மற்றும் ராஜேஷ், சக்தி ஆகியோர் காரில் கடத்தி சென்று, கம்பியால் தாக்கி உள்ளனர்.

இதனிடையே கணவர் கடத்தப்பட்டது குறித்து ஷோபா பாளை. போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதையறிந்து விஜயபாண்டியை காரில் இருந்து இறக்கி விட்டு செல்லத்துரை தரப்பினர் தப்பினர். இந்நிலையில் செல்லதுரை மற்றும் ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  சக்தியை தேடி வருகின்றனர்.

Related Stories: