அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள்; வாக்குப்பெட்டிகள் இன்று டெல்லியில் இருந்து வருகிறது

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று டெல்லியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள மாநில தலைமை அலுவலகங்களில் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஓட்டு பெட்டிகளும், ஓட்டு சீட்டுகளும் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 711 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 4 ஓட்டு பெட்டிகள் இன்று வருகின்றன. நாளை வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 180 வாக்குகள் வீதம் பிரிக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளாக வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் செயல்படுவார்கள். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ‘கியூ ஆர்’ கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

அவர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க செல்ல வேண்டும். வாக்காளருக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும். வாக்கு சீட்டில் முதல் பெயராக மல்லிகார்ஜூன கார்கே பெயர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடப்பட்டு உள்ளது. 2வது பெயராக சசி தரூர் பெயர் உள்ளது. வாக்குச்சீட்டின் அடியில் எந்த மாநிலம், வாக்காளர் பெயர், வரிசை எண், இடம் ஆகிய விபரங்கள் கேட்கப்பட்டு பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் ஓட்டுபோடலாம். நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் இந்த 4 பெட்டிகளும் விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறு 19ம்தேதியே யார் காங்கிரஸ் புதிய தலைவர் என அறிவிக்கப்படும்.

Related Stories: