ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரமாண்ட புத்தக கண்காட்சி-அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

வாலாஜா : வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில்  புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்து அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். வாலாஜாஅறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம்  பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் விற்பனையாளர்  சங்கத்தின் சார்பில்  முதலாவது மாவட்ட அளவிலான புத்தக கண்காட்சி நேற்று  தொடங்கியது.

இந்த புத்தக கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாகவும் பார்வையாளரை கவரும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள பிரபலமான பதிப்பகங்கள் தங்கள் வெளியீடுகளை  விற்பனைக்காக வைத்துள்ளது. இதற்கிடையே நேற்று நடந்த தொடக்க விழாவிற்கு  கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

டிஆர்ஓ குமரேஷ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது: கலைஞரின் ஆட்சிக் காலத்தில் கல்விக்கும், மகளிருக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததால் நமது மாநிலத்தில் பெண்கள் உயர்கல்வி பெற்று மிக உயர்ந்த இடத்திற்கு சென்றனர். தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதே பாணியை பின்பற்றி தொடர்ந்து கல்விக்காக  மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளார்.

அதன் ஒருபடிதான்  தமிழகத்தில் புத்தகக் கண்காட்சி மாவட்டம்தோறும்  நடைபெறுகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் கோட்டூர் புரத்தில் தொடங்கப்பட்டது. தற்போது மதுரையில் தமிழக முதல்வரால் ₹70 கோடி மதிப்பில் பிரம்மாண்ட கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

மாணவ மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் கல்வி செலவுக்காக ₹ஆயிரம் நிதி வழங்கும் புதுமை பெண் திட்டம் இந்த ஆட்சியில் நடைபெற்று வருகிறது. கல்வி மட்டுமே அழியாத சொத்து. ஒவ்வொருரின் முன்னேற்றத்திற்கு படிப்பு தான் முக்கியம். அண்ணல் காந்தியடிகள் அவரிடம் ஒரு கோடி இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு ஒரு நூலகம் அமைப்பேன் என்றார்.

அதேபோல் டாக்டர் அம்பேத்கர் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன சொத்து சேர்த்து வைத்து உள்ளீர்கள் என கேட்டதற்கு நான் இரண்டு லட்சம் புத்தகங்களை வைத்துள்ளேன்  என தெரிவித்தார். கோயில் இல்லாத இடத்தில்  குடியிருக்க வேண்டாம் என்பது ஒரு கால பழமொழி. ஆனால் தற்போது நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தான் புது மொழி.புத்தகம் வாசிப்பது நமது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இந்த புத்தக கண்காட்சியில் கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான சிறந்த புத்தகங்கள் கிடைக்கும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்  புத்தகம் படிப்பதால் தான் எதிர்கால வாழ்க்கை சிறப்பான முறையில் அமைந்திடும்.

இவ்வாறு அவர் பேசினார். வருகிற 22ம்தேதி வரை தொடந்து இந்த புத்தக கண்காட்சி நடைபெறும்.  நேற்று மாலை விவாத மேடையில் பரதநாட்டியமும் நடந்தது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள்  பங்கு கொண்டு பேசினர்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி தீபா சத்யன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட்,  நகராட்சி தலைவர்கள் ஹரிணிதில்லை, சுஜாதா வினோத்,  ஒன்றிய கவுன்சிலர் அண்ணா ஆறுமுகம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: