தர்மபுரி அருகே சோளம், ராகியை துவம்சம் செய்யும் வெட்டுக்கிளிகள்-வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு

தர்மபுரி : நல்லம்பள்ளி வட்டாரத்தில் சோளம், ராகி பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரித்துள்ளது. அதனை வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

  தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் பட்டகபட்டி, பாகலஅள்ளி, கெங்கலாபுரம், முன்சீப்கொட்டாய், முத்தம்பட்டி, ஒன்டிகான் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக சோளம் மற்றும் ராகி சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில், பயிர்களில் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகமது அஸ்லாம் உத்தரவின்பேரில், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தின் பயிர் நோயியல் துறை தெய்வமணி, நல்லம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பயிர்களை தாக்குவது பாலைவன வெட்டுக்கிளி இல்லை என்பது தெரியவந்தது. சாதரண புல்வகை பயிரை தாக்கும் வெட்டுக்கிளிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் இந்த வெட்டுக்கிளிகள் பற்றி அச்சப்பட வேண்டாம் என விளக்கினர்.

 வெட்டுக்கிளியின் சேதம் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் கூறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி அமைக்க வேண்டும். சோளப்பயிர் தோட்டத்தில் ஏக்கருக்கு 20 என்ற அளவில், பறவை தாங்கிகள் அமைக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 5 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீர் (அ)அசாடிராக்டின் 2 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து காலை(அ) மாலை நேரங்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம்,’ என்றனர். இந்த கள ஆய்வில், நல்லம்பள்ளி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன் மற்றும் மாதேஷ், உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேயன், உதவி தொழில்நுட்ப மேலாளர் அருள்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: