நளினி, ரவிச்சந்திரன் விடுதலை உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: தமிழக அரசு பதில் மனு

புதுடெல்லி: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று, தங்களையும் விடுதலை செய்யும்படி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு தமிழக அரசும், ஒன்றிய அரசும் பதிலளிக்க கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இரண்டரை ஆண்டுகளாக காலம் தாழ்த்தி ஜனாதிபதிக்கு அனுப்பினார். கடந்த ஜனவரி மாதம் முதல் 9 மாதங்களாக அந்த பரிந்துரை ஜனாதிபதி மாளிகையில் கிடப்பில் உள்ளது. ஆளுநர் காலம் தாழ்த்திய காரணத்தால்தான், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. நளினி, ரவிச்சந்திரன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

* மேலும் 3 பேர் மனு

பேரறிவாளனை போல் தங்களையும் விடுதலை செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ராஜிவ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளிகளான ராபர்ட் பயஸ், சாந்தன் மற்றும் ஜெயக்குமாரும் தங்களை விடுதலை செய்ய உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: