மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மின் மோசடிகளை தவிர்க்க மின்நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், மின்கட்டணத்தில் இருந்து 100 யூனிட் மின்சார பயன்பாடு கழித்துவிட்டு மீதமுள்ள கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மின் மோசடிகளை தவிர்க்க மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோரும் தங்களது ஆதார் அட்டையை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தலின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்பு நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும் பொது வழிப்பாட்டு தலங்களுக்கு முதல் 750 யூனிட் இலவசமாகவும், கைத்தறி நுகர்வோருக்கு முதல் 200 யூனிட் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மின்நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்கும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பித்த சீட்டை இணைக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் மானியம் பெறும்  மின்நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: