ரூ.394 கோடியில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம் பொங்கலுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: புதிய ரயில்நிலையம் கொண்டு வரப்படும்; அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரும் பொங்கல் பண்டிகைக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அப்போது, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் உடன் இருந்தார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கத்தல் 110 ஏக்கரில், ரூ.393.74 கோடியில் பஸ் முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இதன் பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: கிளாம்பாக்கம் பகுதியில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளில் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 20% பணிகள் 60 நாட்களுக்குள் முடிவடையும். 2,350 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது‌.

இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் தமிழக அரசு இணைந்து நடவடிக்கை எடுக்கும். இதேபோல், பேருந்து நிலையத்தின் எதிர்புறம் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு புதிய ரயில் நிலையம்  மற்றும் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவையை முதல்வர் துவக்கி வைக்கிறார். சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டர் துாரத்துக்கு பறக்கும் ரயில் திட்ட பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, நேற்று காலை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பறக்கும் ரயில் திட்ட அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞரால் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் திட்டம் 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இறுதியாக ஆதம்பாக்கம் பகுதியில் பணிகள் நடைபெறுகிறது. அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை ஆய்வு செய்துள்ளோம். மார்ச் மாதம் இந்த பணிகள் நிறைவு பெரும். அதனைதொடர்ந்து, வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் சேவையை மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார் என்றுகூறினார்.

Related Stories: