கோண்டூர் ஊராட்சியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிக்கு விஷ ஜந்துக்கள் படையெடுப்பு: மக்கள் பரிதவிப்பு

கடலூர்: கடலூர் மாநகரின் புறநகர் பகுதியாகவும் ஒன்றியத்தின் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராட்சியாகவும் கோண்டூர் ஊராட்சி அமைந்துள்ளது. கோண்டூர் ஊராட்சியில் மாசிலாமணி நகர், ராம் நகர், ஜோதி நகர், டிஎன்சிஎஸ்சி நகர், ரெயின்போ நகர் என பல்வேறு நகர் பகுதிகள் அமைந்துள்ளன. பிரதானமாக கெடிலம் ஆற்றின் கரையோரம் மாசிலாமணி நகர் உள்ளிட்ட நகர் பகுதிகள் உள்ளது.

இந்நிலையில் கோண்டூர் ஊராட்சி பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாத நிலையில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட தாவரங்கள் படர்ந்தும் புதர் மண்டியும் விஷ ஜந்துகளின் புகலிடமாக வடிகால் வாய்க்கால்கள் மாறி உள்ளன.

இதுபோன்று கிருஷ்ணா கார்டன், ஓம் சக்தி நகர், ஜோசப் நகர் உள்ளிட்ட இடங்களில் பன்றிகளின் உலா அதிகரித்துள்ளது. இதுபோன்ற நிலையால், சம்பந்தப்பட்ட ஊராட்சி மக்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விஷ ஜந்துக்கள் படையெடுப்பு பன்றிகள் உலா என சுகாதாரமற்ற சூழ்நிலையை ஊராட்சியில் ஏற்படுத்தி வரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒன்றிய மற்றும் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோண்டூர் ஊராட்சி மக்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories: