சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மழைநீர் வடிகால் பணி 95 சதவீதம் நிறைவு: மேயர் பிரியா தகவல்

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று மேயர் பிரியா கூறினார்.  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ரிப்பன் மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் இதுவரையில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து முக்கிய அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முக்கிய பணிகளை செய்து வருகிறோம்.  பள்ளிகளுக்கான எம்பளம், லோகோ வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு பள்ளி தலைவர், வகுப்பறை தலைவர், விளையாட்டு தலைவர் என அங்கீகாரம் வழங்க இந்த ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது மாணவர்களை ஊக்குவிக்கும் என நம்புகிறோம். கற்கும் திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை வகுப்பு தேர்வு எழுத வைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வாசிக்கும் திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். சென்னை மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை சில இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பொறுத்தவரை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 5 சதவீத பணிகளை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற பணிகள் நிறைவடைய சில காலங்கள் ஆகும். கொசஸ்தலை ஆறு பணிகள் என்பது அடுத்த ஆண்டு இறுதியில்தான் நிறைவடையும்.

டெங்கு காய்ச்சல் எண்ணிக்கை சில இடங்களில் அதிகரித்து வருவதால் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பருவமழையையொட்டி மழைநீரை வெளியேற்றுவதற்காக அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் 112 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவையை அறிந்து மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் பொருத்தப்படும். சிந்தாதிரிபேட்டையில் 10000 பேருக்கு உணவு வழங்கும் வகையில் உணவு கூடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: