ரஷ்யாவின் பிடியில் இருந்த 5 நகர்புறங்களை கைப்பற்றியது உக்ரைன்

கீவ்: ரஷ்யாவின் பிடியில் கெர்சன் பிராந்தியத்தில் இருந்த 5 நகர்புறங்களை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் உள்பட 4 நகரங்களை ரஷ்யா சமீபத்தில் இணைத்து கொண்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், அவற்றில் பல பகுதிகளை உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் பிடியில் இருந்து மீட்டு வருகிறது. ரஷ்ய படையினர் ஜபோரிஜியா பகுதியில் நடத்திய தீவிர தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் கீவ் நகரை நோக்கி 84 ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதல் 14 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், ரஷ்யாவின் பிடியில் இருந்த கெர்சன் பிராந்தியத்தில் உள்ள 5 நகர்புறங்களை உக்ரைன் ராணுவம் மீட்டிருப்பதாக அதன் தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் தெரிவித்தார். அதன்படி, நோவோவாசிலிவ்கா, நோவோரிஹோரிவ்கா, நோவா கம்யங்கா, டிரைபோனிவ்கா மற்றும் செர்வோன் ஆகிய 5 நகர்புறங்களை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.  இதனிடையே, கிரீமியா பாலம் வெடித்தது தொடர்பாக சந்தேகத்துக்குரிய 8 பேரை கைது செய்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Related Stories: