சென்னை ராயபுரத்தில் ரூ.7 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

சென்னை: சென்னை ராயபுரத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார். சென்னை ராயபுரம் சிமெண்டரி சாலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கீழ்தளம் 3 தளம் கொண்ட 2 கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இது குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறும்போது, ‘‘கல்லூரி மாணவிகள் 100 பேர் தங்க வசதியாக 3 தளம் உள்ள 1 கட்டிடம் மற்றும் ஐடிஐ கல்லூரி மாணவிகள் 100 பேர் தங்க வசதியாக 3 தளம் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இந்த விடுதியில் கூடுதலாக மாணவிகள் தங்க நேரிட்டால் அதற்கான வசதியும் கொண்ட கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது. இதில், மாணவிகள் தங்கும் அறை, சமையலறை, கழிப்பறை நூலகம் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட விடுதியாக கட்டப்படும் பணிகள் வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும்’’ என்று தெரிவித்தார். ஆய்வின்போது, துறை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: