விசா தடையை 3 ஆண்டுக்கு பின்னர் நீக்கியும் சீனாவுக்கு நேரடி விமான சேவை கிடையாது; ஹாங்காங் வழியாக செல்லும் இந்திய மாணவர்கள்

புதுடெல்லி: மூன்று ஆண்டுக்கு பின்னர் விசா தடையை சீனா நீக்கிய பின்னரும், அந்நாட்டிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது என்பதால் ஹாங்காங் வழியாக இந்திய மாணவர்கள் பீஜிங் செல்கின்றனர். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியது முதல் தற்போது வரை அந்த நாட்டுடனான நேரடி இந்திய விமான சேவை தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் சீனாவில் படித்து வந்த மாணவர்கள், வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டதால், சீனாவுடனான விமான சேவையை பல நாடுகள் தொடங்கியுள்ளன.

இருந்தும் சீனாவில் சில மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால், இந்தியாவில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்குவதற்கான சூழல்கள் இல்லை. இந்தியாவில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவை இல்லாததால், இந்தியாவில் இருந்து ஹாங்காங் வழியாக சீன தலைநகர் பீஜிங்கிற்கு இந்தியர்கள் பயணித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ஹாங்காங் வழியாக சீனாவுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளியுறவு துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சீனாவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருப்பதால், அந்நாடு திடீர் திடீரென வெளிநாட்டு விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. 3 ஆண்டுக்கு பின்னர் சமீபத்தில் விசா தடையை சீன அரசு நீக்கியுள்ளது. ஆனால், சீன அரசு தங்களது கொள்கையை முழுமையாக மாற்றியமைக்காத வரை, எதிர்காலத்திலும் இருநாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவை தொடங்க வாய்ப்பில்லை’ என்றன.

Related Stories: