மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை: சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு

திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில், பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து  நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கலந்துகொண்டார். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 19வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியில் நேற்று நடந்தது. கவுன்சிலர் காசிநாதன் தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று பருவமழை தொடங்குவதற்கு முன் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

அப்போது, கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், மாத்தூர் ஏரியை தூர்வார வேண்டும், எதிர்பாராதவிதமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்து மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பேசியதாவது: பெருமழை பெய்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது அனைத்து பகுதிகளிலும், மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு 80 சதவீத பணி முடிக்கப்பட்டு விட்டது. ஒரு சில நாட்களில் இந்த பணிகள் முற்றிலுமாக நிறைவடையும். அடிப்படை வசதி தொடர்பாக பொதுமக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன். மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: