கண்ணதாசன் நகரில் இருந்து தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட 7 இடங்களுக்கு பேருந்து வசதி: குறைதீர் முகாமில் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ உறுதி

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில் நடந்த குறைதீர் முகாமில், பொதுமக்களின் கோரிக்கை ஏற்று கண்ணதாசர் நகரில் இருந்து தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட 7 இடங்களுக்கு பேருந்து வசதி செய்யப்படும் என எம்எல்ஏ ஆர்.டி.சேகர் உறுதி அளித்தார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி 36வது வார்டுக்குட்பட்ட எம்கேபி நகர் மேற்கு பகுதியில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று காலை நடந்தது. பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், தண்டையார்பேட்டை மண்டல செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், குடிநீர் வழங்கல் உதவி பொறியாளர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி, வட்ட திமுக செயலாளர் க.பாபு, மின்துறை அதிகாரிகள், மழைநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முகாமில், எந்தெந்த பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி எவ்வளவு பணிகள் முடிக்க வேண்டி உள்ளது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சில இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்தும், பொதுமக்கள் தங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவை விரைவில் சரி செய்யப்படும் எனவும், அதேபோன்று தாழ்வான பகுதியில் உள்ள மின்சார பெட்டிகள் உயர்த்தப்பட்டு, ஆங்காங்கே உள்ள மின் கேபிள்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எம்கேபி நகர் மற்றும் கண்ணதாசன் நகர் பகுதியில் இருந்து பெரம்பூர் அல்லது பாரிமுனை சென்று பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாக கூறி பல்வேறு வழித்தடங்களில் பேருந்து வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, கவியரசர் கண்ணதாசன் நகர் பகுதியில் இருந்து சைதாப்பேட்டை, தியாகராய நகர், கோயம்பேடு, திருவான்மியூர், அம்பத்தூர், திருவேற்காடு, திருவொற்றியூர் உள்ளிட்ட 7 இடங்களுக்கு பேருந்து வசதிகள் செய்யப்படும் என எம்எல்ஏ ஆர்.டி.சேகர் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்தார். இதுதவிர மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: