உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்கலாம்: ஒன்றிய அரசுக்கு யு.யு.லலித் பரிந்துரை

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்கும்படி, ஒன்றிய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனக்கு பிறகு தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்வது வழக்கம். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தற்போதையை தலைமை நீதிபதியான யு.யு.லலித்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 8ம் தேதியோடு நிறைவடைகிறது. 74 நாட்களாக பதவியில் இருக்கும், இவர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யும்படி, தலைமை நீதிபதி யு.யு.லலித்திற்கு கடந்த வாரம் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. அதன்படி, அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்கும்படி, ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். மேலும், நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளையும், தனது ஓய்வு அறைக்கு அழைத்த தலைமை நீதிபதி யு.யு.லலித், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தை அவர்களின் முன்னிலையில் வழங்கினார். ஒன்றிய சட்ட அமைச்சகமும், ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினால், புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்படுவார். நவம்பர் 9ம் தேதி, நாட்டின் 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 2024ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி வரை இந்த பதவியில் நீடிப்பார்.

Related Stories: