புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்ட மாஜி கணவர் மீது நடவடிக்கை கோரி கெரசின் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி-கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை : தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்ட மாஜி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலில் கெரசின் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில், முன்னாள் கணவர் அடிக்கடி அந்த பெண்ணை நேரில் சந்தித்து டார்ச்சர் கொடுப்பதும், வேலைக்கு செல்லும் இடத்தில் அவதூறு பேசியும், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரும், அவரது உறவினர்களும் வலைதளத்தில் பதிவிட்டும் வந்துள்ளனர். இதனால் மனவிரக்தி அடைந்த அந்த பெண், நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாய்ந்து சென்று அவரது கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவரை காப்பாற்றினர். பின்னர் அவரை விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: