லஞ்ச வழக்கில் தண்டனை பெற்றவர் பாளை. சிறையில் தாசில்தார் சாவு

நெல்லை: தென்காசி அருகே மேலகரம் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் அருணாசலம் (68). இவர், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2007ம் ஆண்டு தாசில்தாரராக பணியில் இருந்தபோது லஞ்ச வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 2017ல் தாசில்தாருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பீல் மனு செய்தார். அங்கும் 1 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அருணாசலம் கடந்த மாதம் 15ம் தேதி பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 6ம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று அதிகாலை அருணாசலம் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: