அரியானா மருந்து கம்பெனி குற்றம் செய்வதையே வழக்கமாக கொண்டது: காம்பியாவில் 60 குழந்தைகள் பலி பற்றி அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி : காம்பியாவில் 60 குழந்தைகளின் மரணத்துக்கான காரணமான கூறப்படும் மெய்டன் மருந்து கம்பெனி, தரம் குறைந்த மருந்துகளை தயாரிப்பதையே வழக்கமாக கொண்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் சிறுநீரக பாதிப்பால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது பற்றி ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு, இந்தியாவை சேர்ந்த ‘மெய்டன் பார்மசூட்டிக்கல்’ நிறுவனத்தின் இருமல், ஜலதோஷ மருந்துகளை பயன்படுத்தியதால், இவர்களின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் 4 வகையான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, உலகளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி  இருக்கிறது. இதைத் தொடர்ந்து,  இந்த நிறுவனத்தின் மருந்துகளின் தரம் பற்றி தீவிர விசாரணை நடத்த ஒன்றிய அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குற்றங்கள் செய்வதையும், தரம் குறைந்த மருந்துகளை தயாரிப்பதையும் இந்த மருந்து நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல்  வெளியாகி உள்ளது. 2008ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரையில் பல்வேறு மாநிலங்கள், சில உலக நாடுகள் இதன் மருந்துகளுக்கு  தடை விதித்து இருக்கின்றன.

அவற்றின் விவரம் வருமாறு:

2008:   எரித்திரோமைசின் ஸ்டேரேட் 125 எம்ஜி மருந்தின் தரம் மிக மோசமாக இருப்பதாக பீகார் அரசு தடை விதித்தது.

2011: மித்தைல்எர்மெட்ரைன் மாத்திரை போலியானது என பீகார் அரசு தடை விதித்தது.

2011- 2013: மெய்டன் மருந்து கம்பெனிக்கு வியட்நாம் தடை விதித்தது.

2013: மெசிபுரோ மாத்திரை சரியாக கரையவில்லை என குஜராத் அரசு தடை விதித்தது.

2020: சிப்ரோபெப்டைன் ஹைட்ரோகுளோரைட் சிரப் ஐபி என்ற மருந்தின் தரம் குறைவாக இருப்பதாக ஜம்மு காஷ்மீரில் தடை விதிக்கப்பட்டது.

2021: மெட்போர்மின் 1000 மாத்திரைக்கு (சரியாக கரையவில்லை) கேரளாவில் தடை.

2021: எசிபிரின் மருந்து தரம் சரியில்லை என கேரளா தடை.

2021:  மெட்போர்மின் 500 எம்ஜி மாத்திரைக்கு கேரளா தடை

2021: மைகல் டி மாத்திரை தரம் குறைவாக இருப்பதாக கேரளாவில் தடை.

Related Stories: