ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சத்தில் மூலிகை பூங்கா

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சத்தில் மூலிகை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பட்டு நூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு அலுவலக பணிகளுக்காக இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர். இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 50க்கும் அதிகமான ஊழியர்கள் பாணியில் உள்ளனர். மேலும், இந்த வளாகத்தில் ஆர்டிஓ அலுவலகம், அஞ்சலக அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பள்ளி, இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மேற்கண்ட அலுவலகங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது, கடந்த 10 ஆண்டுகளாக இந்த அலுவலகம் புதர்மண்டி காணப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் அமுதா, ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது, வளாகம் முழுவதும் குப்பைகள் காணபட்டன. மேலும், தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. இதனையடுத்து, வளாகத்தை முழு சுகாதாரமாக வைத்துகொள்ள வேண்டும் என்றும், வளாகத்தில் பூங்கா அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சென்றார். இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் மூலிகை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: