1962ம் ஆண்டு நெருக்கடிக்கு பிறகு உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: அணு ஆயுத மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபருக்கு ஜோ பைடன் கண்டனம்..!

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்துள்ள அணுஆயுத மிரட்டல், ஆக்க சக்திகளுக்கும், அழிவு சக்திகளுக்கும் இடையிலான இறுதிகட்ட போர் அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது 7 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஜி7 கூட்டமைப்பும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் மீது, பொருளாதார தடைகளை விதித்து ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால், உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களுக்கு, ரஷ்யாவையே நம்பியுள்ள மேற்கத்திய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. அத்ந தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியடைந்தது. இதனிடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைத்தால் அணுஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று அண்மையில் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன்; 1962 ஆண்டு நிகழ்ந்த கென்னடி மற்றும் கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு பிறகு உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மனிதகுல பேரழிவுக்கான அச்சுறுத்தல் இது. அப்போது கியூபாவில் அணுசக்தி ஏவுகணைகளை நிறுத்தி சோவியத் யூனியன் அச்சுறுத்தியது. உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவேன் என்று ரஷ்ய அதிபர் புதின் சொல்வதை வெறும் பகடியாகக் கடந்துவிட முடியாது. அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடினின் சரிவுப்பாதையை கண்டுபிடிக்க தாம் முயலுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: